பழனியில் ரயிலில் அடிபட்டு திமுக பிரமுகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல், பழனி கோட்டைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் ராஜா முகமது (60), இவர் தனது மனைவி, மகளுடன் வசித்து வந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர தொண்டராகவும், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளராக ராஜமுகமது இருந்துள்ளார். கடந்த சில வருடங்களாக ராஜா முகமதின் மனைவி மற்றும் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மேலும் ராஜா முகமது பழனியில் உள்ள பள்ளிவாசலில் தற்காலிக பணியாளராக இருந்த நிலையில், அவரது வேலையும் போனதால் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி தவித்துள்ளது.
இந்நிலையில் ராஜா முகமது, தான் குடும்ப வறுமை காரணமாகவும் பாடுகள் பட இயலாத காரணத்தாலும் தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு,கோதைமங்கலம் ரயில்வே தண்டவாளத்தில் திருவனந்தபுரத்திலிருந்து மதுரைக்கு சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் ராஜா முகமதின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப வறுமை காரணமாக திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டு வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மைய எண்; 104
சினேகா தொண்டு நிறுவனம்:
எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060