’உயிரோடு இருக்கும் போதே ஆதாரில் செத்துப்போனதாக காட்டுவதாகவும், அதனை மாற்ற 2 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுவதாகவும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
’’இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் இந்தியக் குடிமகன்கள், குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கியுள்ளது. இந்த ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை வீட்டிலிருந்து கொண்டே மொபைல் போன் மூலமாக அப்டேட் செய்யும் வசதியை ஆதார் வழங்கும் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொழியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். ஆதார் கேந்திராவிற்கு செல்லாமல், மக்கள் இப்போது இணையத்தில் தங்கள் ஆதார் விவரங்களில் மாற்றங்களைச் செய்யலாம். நீங்கள் இப்போது உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மாற்றிக் கொள்ளலாம். அலைச்சல் இல்லாமல் ஆதார் அப்டேட் செய்யலாம்... இதுதான் போன் நம்பர்... எளிமையா முடிக்க வழிமுறைகள் இதோ’’என இணையத்தில் தட்டினால் கூவுகிறார்கள். ஆனால், ஆதாருக்காக இரண்டு ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு வருவதாக கதறுகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில், உயிருடன் உள்ள இஸ்லாமியப் பெண் ஒருவரை இறந்ததாக ஆதார் அட்டையில் தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். அதனை மாற்றச் சென்றால் அலைக்கழிக்கப்பட்டு வருவதாகப் புகார் கூறுகிறார் அந்த சாமானியப் பெண். சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டியில் வசித்து வரும் ஜரீனா பேகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சேர்வதற்காகத் தனது ஆதார் கார்டு கொடுத்துள்ளார்.
அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை மையத்தில், இந்த ஆதார் அட்டை செல்லுபடியாகாது எனக் கூறி, புதிய ஆதார் அட்டை எடுத்து வாருங்கள் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர். அதன்படி ஜரீனா பேகம் நத்தம் ஆதார் மையத்துக்குச் சென்றுள்ளார். புதிய ஆதார் அட்டை எடுத்தவுடன் ரத்து செய்யப்பட்டது என வருவதாகக் கூறியுள்ளனர். ஆதார் மையத்தில் உள்ளவர்கள் ஜரீனா பேகத்திடம் நீக்கல் இறந்து விட்டதாக ஆதார் மைய கணினியில் வருவதாகக் கூறி, கிண்டல் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜரீனா பேகம் கூறுகையில், ‘’நானும் எர்ண்டு வருஷா அலையுறேன். அத்தூர் போகச் சொல்றாங்க. செம்பட்டி போகச் சொல்றாங்க. செம்பட்டில இருந்து தாலுகா ஆபீஸ் போக சொல்றாங்க. தாலுகா ஆபீஸ்ல இருந்து ஆதார் மையத்துக்கு போகச் சொல்றாங்க. ஆதார் மையத்துல இருந்து திண்டுக்கல் இ-சேவை மையத்துக்கு போகச் சொன்னாங்க. இ0--சேவை மையத்துக்கு போனால் இதெல்லாம் செல்லாதுனு தூக்கி வீசிட்டாங்க. நத்தம் யூனியன் மையத்துக்கு போனால், நீ இறந்து போயிட்ட. உனக்கு ஆதார் அட்டையே இல்லை என்கிறாகள். இறந்து போனதாக எழுதிப்போடு பணம் வரும்னு கேலி செய்து சிரிக்கிறாங்க.நானும் அலைந்து அலைந்து ஓய்ந்து போய்ட்டேன். எனக்கு என்ன தான் தீர்வு?’’என கண்ணீருடன் கேள்வியை முன் வைக்கிறார் ஜரீனா பேகம்.
சாமானிய மனிதர்களின் அடையாளம் என பெருமைப்படும் இந்திய அரசு ஜரீனா பேகத்தை அலைக்கழிக்காமல் ஆதார் கிடைக்க வழிவகை செய்யுமா?
- மேனகா அஜய்