கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா நாட்களில் நடராஜர் கோவிலில் மூலவராக இருக்கின்ற நடராஜரே தேருக்கு வந்து விழாவில் கலந்துகொள்வதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள கனக சபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய யாருக்கும் 4 நாட்களுக்கு அனுமதி இல்லை என தீட்சிதர்கள் திடீரென அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர்.
பக்தர்கள் சிலர் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அறிவிப்பு பதாகையை அகற்றக்கோரி அறநிலையத்துறை அதிகாரி சரண்யா அங்கு சென்றபோது தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.