பாலக்கோடு அருகே இளைஞர் ஒருவர், காட்டு பன்றிக்கு தான் அமைத்த மின்வேலியில் தானே சிக்கி உயிரிழந்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த சூடானுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் நவீன் (30). இவர் சூடானூரில் உள்ள தனது நெல் வயலில் இரவு நேரங்களில் காட்டு பன்றி புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வந்ததால், காட்டு பன்றிகளை கொல்ல நெல்வயலை சுற்றி திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மின்வேலியில் சிக்கி நவீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவ்வழியாக சென்றவர்கள் நவீன் மின் வேலியில் சிக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பஞ்சப்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த பஞ்சபள்ளி காவல் துறையினர் மின்சாரத்தை துண்டித்து உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டு பன்றிக்கு வைத்த மின்வேலியில் தானே சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.