அதியமான்கோட்டை, காலபைரவர் கோயில் கிரிவலப் பாதையை இரும்புவேலி கொண்டு அடைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ளது மிகவும் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் திருக்கோயில். இக்கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி நாட்களில், சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் தமிழகத்தின் நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநில பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சாம்பல் பூசணயில் விளக்கேற்றி கோவிலை சுற்றி கிரிவலமாக வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த கோவில் மூலவர் முன்பகுதியில், தீபம் ஏற்றும் கிரிவலப்பாதை குறுக்கே, தங்களது பட்டா நிலம் எனக்கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பக்கத்து நிலத்தை சார்ந்த மர்மகும்பல் ஒன்று இரும்புவேலி போட்டு அடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிவலப்பாதையில் திடீரென இரும்புவேலி கொண்டு அடைக்கப்பட்டதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலை கிரிவலம் சென்று தரிசனம் செய்வது தடை பட்டதால், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த கோவில் கிரிவலப்பாதையில் இரும்புவேலி கொண்டு அடைக்கப்பட்டது பற்றி செயல் அலுவலர் ஜீவானந்தம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதியை, உதவி ஆணையர் உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் கோயில் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரும்புவேலி கொண்டு அடைத்த மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இரும்புவேலியை அகற்றித் தரக்கோரி, அதியமான்கோட்டை காவல் நிலையத்தில், கோயில் செயல் அலுவலர் ஜீவானந்தம் தரப்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போலீசார் கோயில் வளாக கிரிவலப்பாதையில் இரும்புவேலி கொண்டு அடைத்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பொய்கை. கோ.கிருஷ்ணா