பெரும்பாலை அருகே அனுமதியின்றி அமைத்த மின்சார வேலியில் சிக்கி வேட்டைக்குச் சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை அடுத்துள்ள புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் வீரன் (55) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் சேட்டு 42 ஆகிய இருவரும் நாட்டு துப்பாக்கியுடன் நரசிபுரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலம் வழியாக இரவில் வேட்டைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், நரசிபுரம் பகுதியைச் சேர்ந்த காவேரி அம்மன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நிழல் கடலை பயிர் செய்துள்ளதால் காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் பயிரை சேதப்படுத்தி வருவதை தடுப்பதற்காக அனுமதியின்றி நிலத்தினை சுற்றி மின்வெளி அமைத்துள்ளார்.
இந்த நிலையில், இரவு நேரத்தில் வேட்டைக்குச் சென்ற வீரன் மற்றும் சேர்த்து ஆகிய இருவரும் அந்த வழியாக செல்லும் போது மின் வேலி அமைக்கப்பட்டு இருப்பதை அறியாத வீரன், மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்தார்.
இதனைக்கண்ட சேட்டு தப்பி ஓடியுள்ளர். திங்கள்கிழமை அதிகாலை மின்வெளியில் சிக்கி வீரன் உயிரிழந்ததை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின்பேரில், நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் மின்வெளியில் சிக்கி உள்ள வீரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வீரனுடன் வேட்டைக்குச்சென்ற சேட்டு, அனுமதியின்றி மின்வேலி அமைத்த காவிரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.