தருமபுர ஆதீனத்தோடு எங்களுக்கு குடும்ப நட்பும் உண்டு என மயிலாடுதுறை தருமபுர ஆதீன கல்லூரி பவளவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரியின் 75வது ஆண்டு பவளவிழா மலர் வெளியீடு, ஆதீன தொலைக்காட்சி, வானொலி ஒளி, ஒலி தொடக்கம், திருக்குறள் நூல் உரை வெளியீட்டு விழா என நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
மாலை 5 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த விழா மாலை 6.45 மணிக்கு மேல்தான் தொடங்கியது. கும்பகோணம் அருகே தனியார் ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த ஸ்டாலின் விழாவிற்கு புறப்பட்டு வந்தபோது கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் கூட்டமாக கூடி ஆங்காங்கே வரவேற்பு அளித்ததுதான் முதல்வரின் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் கல்லூரி மாணவ, மாணவிகளை பிற்பகல் 2 மணிக்கே விழா நடைபெற்ற கலையரங்கத்திற்குள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு குடிதண்ணீரும் இல்லாமல், இயற்கை உபாதைக்கு வெளியே செல்லமுடியாமலும் சிறை வைக்கப்பட்டிருந்ததுதான் கொடுமையான காட்சியாக இருந்தது.
முதல்வர் ஸ்டாலின் விழா மேடையேறியதும் அவருக்கு தருமபுர ஆதீன குருமகாசந்நிதானம் மாலை, சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். அதேபோல் முதல்வருடன் வருகைதந்த அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மற்றும் எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கும் சால்வை, நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது. பின்னர் பவளவிழா மலர், திருக்குறள் நூல் உரை ஆகியவற்றை முதல்வர் வெளியிட்டதோடு ஆதீன தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றையும் தொடங்கிவைத்தார்.
தொடந்து தருமபுர ஆதீன குருமகாசந்நிதானம் ஆசியுரை வழங்கி பேசியபோது, “இந்த கல்லூரியின் வெள்ளிவிழாவின்போது அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி கலந்துகொண்டார். பொன் விழாவின் போது பேராசிரியர் அன்பழகன் கலந்துகொண்டார். இப்போது 75வது பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. தருமபுர ஆதீன கல்லூரியில் ஒவ்வொரு 25 ஆண்டுகளுக்கு கழக ஆட்சிதான் அமைகிறது. இதேபோல் கல்லூரியின் 100வது ஆண்டுவிழாவிற்கும் திமுக தான் ஆட்சியில் இருக்கும். இது ஆன்மீக ஆட்சி என்று நான் பலமுறை சொல்லிவருகிறேன். கோயில் கும்பாபிஷேகங்களுக்கு அனுமதியோடு நிதியும் ஒதுக்கீடு செய்கிறார். நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதனை முதல்வர் செய்து முடிக்கிறார். நான்கு தலைமுறையாக முதல்வர் குடும்பம் ஆதீனத்தோடு தொடர்பில் இருக்கிறது. முத்துவேலனார், கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் என நான்கு பேருடன், இணைந்து பிணைந்து செயல்படுவோம்.” என்று பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் சிறப்புறையாற்றும்போது, “16ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை ஆன்மீகப்பணி, தமிழ்பணி, மருத்துவ சேவை, கல்விப்பணி, அறப்பணி ஆகிய சமூகப்பணிகள் தருமை ஆதீனம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. வரும் செம்டம்பர் மாதம் திமுகவின் பவளவிழாவை நாங்கள் கொண்டாட இருக்கிறோம். அதற்கு முன் இந்த பவளவிழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கலைஞர் படித்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த தண்டபாணி தேசிகர் இந்த கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்திருக்கிறார். தருமபுர ஆதீனத்தோடு உள்ள நட்பு தமிழ் நட்புமட்டுமல்ல. எங்களுக்குள் குடும்ப நட்பும் உண்டு. தருமை ஆதீனத்திற்கு கட்டுபட்ட 27 கோயில்களில் ஒன்றுதான் எங்கள் தந்தையார் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள கோவில். இந்து சமய அறநிலையத்துறையை சிறப்பாக நிர்வகித்துவருகிறோம்.
மூவாரயிம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு, அறநிலையத்துறை சார்பில் 10 கலைக்கல்லூரிகள், கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு, பழமையான கோவில்களை சீர் செய்து கும்பாபிஷேகம் செய்ய உத்தரவு, திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுனர்குழு, தற்போது வரை 3,986 கோவில்கள் திருப்பணி செய்ய அனுமதி, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவில்களை திருப்பணி செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு, இந்த நிதியாண்டில் மட்டும் 5078 கோவில்கள் திருப்பணி செய்ய அனுமதி என அறநிலையத்துறையை காத்துவரும் ஆட்சிதான் இந்த திமுக ஆட்சி. அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைத்துவிடக்கூடாது என்று ஏங்கும் ஒரு கூட்டம்தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. தருமை ஆதீனம் போன்று நல்லிணக்கத்தை விரும்பும் குருமகாசந்நிதானங்கள் தமிழகத்தில் எங்களை ஆதரிக்கின்றனத என்பது எங்களுக்கு போதுமானது.” என்றார்.
-ஆர்.விவேக் ஆனந்தன்