தனுஷ் பட ஷூட்டிங்: ‘அனுமதி அளித்தவர்கள் மீது நடவடிக்கை’ - அமைச்சர் துரைமுருகன்
தனுஷின் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடத்த யார் அனுமதியை கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தயாராகி வருகிறது. சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தனுஷ் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாகத் தென்காசி பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதில் வரலாற்று சம்பவங்களைப் படமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நீர்நிலைகளை ஆக்கிரமித்தும், வெடிமருந்துகளைப் பயன்படுத்தியும் வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் நெல்லையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகனிடம் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், ”கேப்டன் மில்லர் திரைப்பட படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி கொடுத்தது என்பது குறித்து உரிய விசாரணை செய்யப்படும்.விதியை மீறி அனுமதி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய தேவை என்ன? என்று கேள்வி எழுப்பினார். மேலும், தாமிரபரணி நதியை பாதுகாக்க திட்டம் தயார் செய்யப்பட உள்ளது” என்றார்.