தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் பணம் கொடுத்துவிட்டு சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை கார்டுதாரர்கள் வாங்க வேண்டிய சூழல் தற்போது நிலவி வருகிறது.
எனவே தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு பணம் செலுத்தும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, ரேஷன் கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் கடைகளில் UPI / QR Code மூலம் பணப் பரிவர்த்தனை செய்து, அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பாக கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 683 ரேஷன் கடைகளிலும் விரைவு எதிர்வினை (QR Code) குறியீடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ரொக்கமற்ற பண பரிவர்த்தனை மேற்கொள்ள ஏதுவாக கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, மதுரை, சென்னை, வேலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தூத்துக்குடி என 12 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதர மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளில் இன்னும் ஒரு வாரத்தில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்படும்.
எனவே அனைத்து மண்டலங்களில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் Paytm, Google Pay, Phone Pe போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்ய தேவையான நடவடிக்கையை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாக, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கி, மண்டலங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் மே மாதம் 31ம் தேதிக்குள் Paytm, Google Pay, Phone Pe போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கையை உறுதி செய்து அறிக்கை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என, அதில் கூறப்பட்டுள்ளது.