‘அமைதி பூங்காவாகத் திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களைப் பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா?’ என வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் புலம்பெயர் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்துத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தனர். இவை முழுவதும் போலி வீடியோக்கள் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் பீகார் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த விவகாரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும், அம்மாநில டி.ஜி.பி-யும் விளக்கம் அளித்தனர். இருப்பினும் ஆளுங்கட்சியின் விளக்கத்தை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.
இதையடுத்து, பீகார் அரசு சார்பில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்ளிட்டோர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. பீகார் குழுவும் தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கச் சிறப்பு புகார் எண்கள் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் விசாரணை நடத்திய பீகார் குழுவும், வடமாநில தொழிலாளர்கள் குறித்து வெளியான வீடியோ போலியானது. வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த போலி வீடியோ பரப்பியதாக பீகார் மற்றும் தமிழ்நாட்டில் சிலரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் பீகாரை சேர்ந்த பிரபல யூடியூப்பர் மணிஷ் காஷ்யப் வடமாநில தொழிலாளர்கள் குறித்துப் போலி வீடியோக்களை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், ‘அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களைப் பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா?’ என யூடியூப்பர் மணிஷ் காஷ்யப்பிற்கு கேள்வி எழுப்பினர்.
மேலும், ‘அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது’ என்றும் திட்டவட்டமாக கூறினர். வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்துப் போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவற்றை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.