தரமற்ற சைக்கிள்.. விழாவில் பாதியிலேயே வெளியேறிய ஆளும் கட்சி எம்எல்ஏ!

காரைக்காலில் மாணவிகளுக்கு தரமற்ற சைக்கிள் வழங்கியதால் விழாவிலிருந்து பாதியில் வெளியேறிய ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ திருமுருகன்
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ திருமுருகன்

புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக கர்மவீரர் காமராஜர் சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காரைக்கால் வடக்கு தொகுதியைச் சேர்ந்த அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காரைக்கால் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமுருகன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

அப்போது பெரும்பாலான சைக்கிள்களில் பெடல், பெல், முன்பக்க கூடை, சீட் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் கழன்று விழ இதனை கண்டு எம்.எல்.ஏ திருமுருகன் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து விசாரித்தபோது அவசரகதியில் சைக்கிள் உதிரிபாகங்களை மாட்டி மாணவிகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்துள்ளது.

சேதமடைந்துள்ள சைக்கிள்
சேதமடைந்துள்ள சைக்கிள்

தொடர்ந்து மாணவிகளுக்கு வழங்கப்பட இருந்த அனைத்து சைக்கிள்களையும் சோதனை செய்த திருமுருகன் அவைகள் ஏதாவது ஒரு வகையில் சேதமடைந்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கோபமான திருமுருகன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, "இந்த சைக்கிள்களை வழங்கவேண்டாம். வேறு புதிய தரமான சைக்கிள்கள் வந்தவுடன் வழங்கலாம்" என்று கூறிவிட்டு நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே புறப்பட்டுச்சென்றார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

அவரிடம் பேசினோம். "அதிகாரிகள் சைக்கிள்கள் தரமாக உள்ளதா? என்பதை ஆராயாமல் அவசர கதியில் வழங்க ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதனால் ஆட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். அதனால் தான் சேதமடைந்த அந்த சைக்கிள்களை மாணவிகளுக்கு வழங்கவேண்டாம் என்று சொன்னேன். வேறு தரமான சைக்கிள்கள் வந்தவுடன் அந்த மாணவிகளுக்கு நானே சென்று சைக்கிள்களை வழங்குவேன்" என்றார்.

சேதமடைந்துள்ள சைக்கிள்
சேதமடைந்துள்ள சைக்கிள்

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் சுமார் 2000 சைக்கிள்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் தரம் மற்றும் நிலை என்ன? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

- ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com