பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டுப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் முருகன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவின்மீது சென்னை உயர்நீதிமன்றம், 3 மாதங்களில் விசாரணையை முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து, கடந்த 2019ல் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதாக, தமிழக பா.ஜ.வின் அப்போதைய தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது திமுக தரப்பில், ஆதாரங்கள் இல்லாமல் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக அவதூறு பரப்பும் வகையில் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்; முரசொலி அலுவலகத்துக்கான பட்டா ஆவணங்கள் தங்களிடம் இருப்பதால் அவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மத்திய இணையமைச்சர் முருகன் தரப்பில், பட்டியலினத்தவர்கள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதையே தான் கூட்டத்தில் பேசியதாகவும், தனிப்பட்ட முறையில் திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளை கட்டப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்த கருத்துக்கு எதிராக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டார். மேலும், 3 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும் கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.