கடலூர் மாவட்டம், வேப்பூர் காவல் நிலைய போலீசார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா எறையூர் கிராமத்தை சேர்ந்த யாக்கோப் (29), மொட்டையன் (40) மற்றும் ஜோசப்ராஜ் ஆகிய 3 பேர் தங்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
பில்லூர் கைகாட்டி அருகே வந்தபோது வாகனத்தை போலீசார் மடக்கியதும் அதிர்ச்சி அடைந்த அவர்களில் 2 பேர் பைக்கை போட்டுவிட்டு தப்பினர்.
யாக்கோப் மட்டும் போலீசில் சிக்கினார். உடனடியாக போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் இருந்த மூட்டையில் வேட்டையாடப்பட்ட மான் மற்றும் நாட்டுத் துப்பாக்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மான் மற்றும் நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விருத்தாசலம் வனத்துறை ரேஞ்சர் ரகுவரன் மற்றும் பாரஸ்டர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் இவர்கள் 3 பேரும் ராமநத்தம் காவல் சரகம் ஆவட்டியில் தங்கி கரும்பு வெட்டி வருவதும், அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் மேய்ந்து கொண்டிருந்த மானை வேட்டையாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யாக்கோபை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காட்டில் மேய்ந்த மான் வேட்டையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.