சிறுவாணி அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. தனது முழு கொள்ளலவை அது எட்டி, நிரம்பி வழிய துவங்கிடும் சூழல் உருவாகலாம். அதனால் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தமிழகம் மற்றும் கேரள அரசுகளின் பொதுப்பணித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்!
வாசிப்பதற்கே எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது இவ்விஷயம்! ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் பொதுவாக இப்படியான செய்திகள்தான் தினசரி நாளிதழ்களில் காணப்படும். ஆனால் இந்த ஆண்டோ…?
ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கிவிடும். இதமான காற்று, பின் சாரல் மழை, அதன் பின் கன மழை, அதன் பின் அடைமழை, அதன் பின் காட்டாற்று வெள்ளம் என்று கேரளத்தின் பெரும்பகுதிகளும், தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களும் சொட்டச் சொட்ட நனைவதே வாடிக்கை.
ஆனால் இந்தாண்டு அது பொய்த்துப் போயுள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே முதல் பாதி மாதங்களில் கூட கணிசமான மழை பெய்தது இப்பகுதிகளில். ஆனால் ஜூனில் வந்திருக்க வேண்டிய பருவ மழை இது வரையில் வரவில்லை. பொதுவாக ஆகஸ்டில் அபாய அளவை தொடுமளவுக்கு உயர்ந்திருக்க வேண்டிய சிறுவாணி நீர்மட்டமோ, இந்தாண்டு அபாய அளவுக்கும் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.
சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம் ஐம்பது அடி எனும் நிலையில், கடந்த ஞாயிறு காலை 8 மணி நிலவரப்படி இருபத்து இரண்டுக்கும் கீழே போயுள்ளது. இதனால் இந்த அணை நீரை நம்பி வாழும் கோவை மாநகராட்சியின் பெரும்பான்மை வார்டுகள், அணையிலிருந்து நீர் ஓடி வரும் வழியோர கிராமங்கள் ஆகியவற்றின் குடிநீர் ஆதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்துக்காக தினமும் பத்து கோடி லிட்டர் தண்ணீரை கேரள அரசு வழங்க வேண்டும். ஆனால் இப்போதைய சூழலில் இது கடினமாகியுள்ளது.
ச்சும்மாவே தமிழக மக்களுக்கு சிறுவாணி அணையின் தண்ணீரை தருவதற்கு கேரளாவுக்கு வலிக்கும், இதில் சூழல் இப்படி இருக்கும் நிலையில் ரொம்பவே இழுத்தடிக்கிறார்கள். இதனால் கோவைக்கு கிடைக்கும் ஒவ்வொரு சொட்டு சிறுவாணி நீரும் அதி முக்கியம்! என்கிறார்கள் அதிகாரிகள்.
இது பற்றி பேசும் மாநகராட்சி அதிகாரிகள் “கடந்த இருபது நாட்களுக்கு முன் இரண்டு மில்லி மீட்டர் மழை சிறுவாணி அணைப்பகுதியில் பெய்தது. அதன் பிறகு ஒரு சொட்டு மழை இல்லை. இனி மழை துவங்கினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். ஆனாலும் மழை கிடைக்குமா என்று தெரியவில்லை! அதனால் இப்போதிருந்தே மக்கள் நீர் சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார்கள்.
தண்ணீருக்கான யுத்தம் வரும்! என்று யாரோ அன்று சொன்னது இப்போது உண்மையாக துவங்குகிறதோ?
-ஷக்தி