திருவேற்காடு அருகே டன் கணக்கில் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்- அதிகாரிகள் ஆய்வு

நச்சு தன்மை உடைய நீர் ஆற்றில் கலந்து மீன்கள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
செத்து மிதக்கும் மீன்கள்
செத்து மிதக்கும் மீன்கள்

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதியில் கூவம் ஆறு செல்கிறது. கூவம் என்ற இடத்தில் இருந்து தொடங்கும் நதி இதுவரை நல்ல தண்ணீராக வரும் நிலையில், இதற்கு பிறகு கழிவுநீர் கலந்து கழிவு நீராக மாறி செல்லும் இந்த பகுதியில் இன்று காலை கூவத்தில் செடிகளுக்கு மத்தியில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை கொண்டு கூவத்தில் செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் இந்த பகுதியில் மட்டும் நான்கு டன்களுக்கு மேலாக மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மீனும் அரை கிலோ முதல் ஒரு கிலோ எடை கொண்ட மீன்களாக இருந்தது. மேலும் செடிகளுக்கு மத்தியில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதப்பதால் செடிகளை அப்புறப்படுத்தி விட்டு செத்து மீன்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த கூவத்தில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீரை விட்டு செல்வதாகவும், தனியார் நிறுவனங்களில் இருந்து இரசாயனங்கள் கூவத்தில் கலப்பதால் இது போன்ற மீன்கள் செத்து மிதக்க காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

நகராட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, வெயிலின் தாக்கம் மற்றும் நீருக்கு அடியில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் மீன்கள் செத்திருக்கலாம் எனவும் நச்சு கலந்த நீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து இறந்து போன மீன்களை எடுத்து சென்று ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும், வேறு ஏதேனும் தனியார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீர் கூவத்தில் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது டன் கணக்கில் அங்கு மீன்கள் செத்து மிதப்பதால் அங்கு மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் திருவேற்காடு காடுவெட்டி செல்லும் தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கூவத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com