சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் கருணாநிதி’ கேலரியில் இருந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கண்டு ரசித்தார்.
கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும் ‘கலைஞர் கருணாநிதி’ கேலரியில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை திடீரென ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியது தொடர்பான படங்கள், மற்றும் வீடியோ வெளியாகி அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கலைஞர் கருணாநிதி கேலரியில் இருக்கும் உள்அறையில் சுமார் 15 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து ஓ.பி.எஸ், சபரீசன் இரு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் பெரிய அளவில் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், சபரீசன் சந்திப்பு குறித்து அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/offiofDJ/status/1654863528430538753?s=20