'மெரினா கடற்கரையில் நேரக் கட்டுப்பாடு': பொது மக்களை காவல்துறையினர் துன்புறுத்துவதற்கு என்ன ஆதாரம்? உயர்நீதிமன்றம் கேள்வி

கடற்கரைக்கு வரும் மக்கள் இரவு 10 மணிக்கு மேல் அனுமதிக்கவும், அவர்களைத் துன்புறுத்தக் கூடாது எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Chennai High court
Chennai High court

கோடை வெயிலின் உக்கிரம் தணிக்க மெரினா கடற்கரை வரும் போது மக்களை நேரக் கட்டுப்பாட்டைக் காரணம் கூறி காவல்துறையினர் துன்புறுத்துகிறார்கள்? என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கோடை வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டி உக்கிரம் காட்டும் நிலையில், வெப்பத்தைத் தணிக்க மக்களுக்குக் கடவுள் கொடுத்த கொடையாக உள்ள மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் தினமும் குவிந்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்துவதாகவும், கான்கிரீட் காடாகிப் போன சென்னை நகரத்தில், உயர்ந்த கட்டடங்களால் வெப்பத்தின் அளவு பல மடங்கு அதிகரிப்பதுடன், தென்றல் காற்று நகருக்குள் வீச முடியாத நிலையும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடைகள், ஹோட்டல்கள் 24 மணி நேரமும் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாற அனுமதித்துள்ள அரசு, வெப்பம் தணிக்கக் கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடற்கரைக்கு வரும் மக்கள் இரவு 10 மணிக்கு மேல் அனுமதிக்கவும், அவர்களைத் துன்புறுத்தக் கூடாது எனக் காவல் துறையினருக்கு அறிவுறுத்தவும் கேட்டு அரசு அதிகாரிகளுக்கு அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு, மெரினா செல்பவர்களைக் காவல் துறையினர் எப்படித் துன்புறுத்துகின்றனர்? என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com