'கடனை கட்டு' - மகளிர் குழுவின் ஆபாச வசையால் விபரீத முடிவெடுத்த கடலூர் இளைஞர்
காட்டுமன்னார்கோயில் அருகே மகளிர் குழு மூலம் வாங்கிய கடனை திரும்பக் கட்ட சொல்லி ஆபாசமாக பேசியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சக்கரவர்த்தி காலனியில் தாய், மனைவி மற்றும் தனது ஒரு வயது குழந்தையுடன் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. தற்போது மனைவி 5 மாத கர்ப்பமாக உள்ளார்.இவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் குடும்ப செலவிற்காக அதே பகுதியில் வசிக்கும் சாந்தி என்பவரிடம் பணம் கேட்டு உள்ளார்.
சாந்தி, குமராட்சி பகுதியில் இயங்கி வரும் மதுரா என்கிற தனியார் மகளிர் சுய உதவிக் குழுவில் அந்தப் பகுதி தலைவியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் குழு மூலம் ரூ.50 ஆயிரம் கடனாக வட்டிக்கு மாதம் ரூ.2472 வீதம் இரண்டு வருடங்கள் கட்ட வேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில் ராஜசேகர் குடும்பத்தினருக்கு வாங்கித் தந்துள்ளார்.
அதனையடுத்து கடந்த இரண்டு மாதம் வரை ராஜசேகர் குடும்பத்தினர் தொடர்ந்து மாத தவணையைச் செலுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு மாத தவணையை உடனே செலுத்துமாறு மதுரா மகளிர் குழுவினர் நேற்று இரவு 7 மணிக்கு அவரின் வீட்டில் சென்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் உங்கள் உயிரைக் கொடுத்தாவது பணத்தைக் கட்டிவிட வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து ராஜசேகரின் தாயாரும், மனைவியும் அவர்களிடம் நாளை (அதாவது இன்று) 12 மணிக்குள் கட்டி விடுகிறோம் எனக் கெஞ்சி உள்ளனர். மதுரா மகளிர் குழுவை சேர்ந்த வசூல் செய்பவர்கள் வீட்டில் உள்ளே நுழைந்து அத்துமீறி நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ராஜசேகர் அவமானம் தாங்க முடியாமல் வீட்டின் உள்ளே சென்று கதவை தாழிட்டுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது உள்ளே தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார்.
உடனே அவரை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ் நம்மிடம் கூறுகையில், ”பணம் வசூல் செய்ய வரும் நபர்கள் தனிப்பட்ட முறையில் பெண்களின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொள்வதாகவும், அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டுத் தொந்தரவு செய்வதாகவும், இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
மேலும் அன்றைய பொழுதில் பணம் கட்டவில்லை என்றால் இரவு நேரங்களில் 11 மணி வரை தொந்தரவு செய்வதாகவும் கூறுகின்றனர். குறைந்த முன்பணத்தில் இருசக்கர வாகனகடன் என்று பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தி வாகனத்தைக் கொடுத்துவிட்டு அவர்களிடம் மாதம் தவணை கட்டுவதற்கு நாட்கள் கடந்து போனால் அடியாட்களை வைத்து இரு சக்கர வாகனங்களை மறைமுகமாக எடுத்துக்கொண்டு செல்கின்றனர். பின்னர் பணம் கட்டியவர்கள் பரிதவித்துக்கொண்டு வேலைகளுக்கு செல்வதற்கு வழியில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் பல குடும்பங்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு மர்மமான முறையில் இது போன்று இறப்பது வாடிக்கையாகி வருகிறது.
தொடர்ந்து பணம் கட்டி வந்தாலும் கடைசி இரண்டு தவணை மூன்று தவணை உள்ள நிலையில் வாகனங்களைக் குண்டர்களை வைத்து அடியாட்களை வைத்து மிரட்டி வாகனத்தைப் பறிமுதல் செய்து விடுகின்றனர்.
இது சம்பந்தமாகத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் பாதிக்கபட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.