இளைஞர்கள் ஒன்று கூடி கிராமத்திற்கு சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் செயல் கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சி.அரசூர், மா.அரசூர் என்ற இரு கிராமங்கள் உள்ளன. மூன்று தலைமுறையாக சுமார் 850க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் முக்கிய சாலை என்பது இல்லாமல் பெரிய வாய்க்கால் கரையை வழிப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
மழைக்காலங்களில் சேரும் சகதியமாக காணப்படும் இந்த வழிப்பாதையில் மக்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாத நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் சிரமத்திற்குள்ளாகி இருந்தனர். அவசர தேவைக்கு கூட வெளியே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்ட இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் புது முயற்சியாக தாங்களே சாலை போட முடிவெடுத்தனர். பெரிய வாய்க்காலை சர்வேயர் மூலம் அளவீடு செய்தனர். அதில் வாய்க்காலின் அகலம் 17 மீட்டர் இருந்தது தெரியவந்தது. விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல ஏதுவாக 10 மீட்டர் வாய்க்காலும் 7 மீட்டர் அகலத்தில் மண் சாலை அமைக்க திட்டமிட்டு, சாலை பணிகளை இளைஞர்கள் ஒன்று கூடி செய்ய ஆரம்பித்தனர். 7 அடி அகலம், 5 அடி உயரத்தில் 2.2 கிலோமீட்டர் நீளத்தில் தற்போது மண்சாலை இளைஞர்களின் கூட்டு முயற்சியால் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிராம இளைஞர் ஜெயதாஸ் கூறுகையில்:
”நான் சிறுவயதில் பள்ளிக்குச் செல்ல சாலை வசதி இல்லாமல் பெரிய வாய்க்கால் கரை ஒத்தையடி பாதையில் பள்ளி சென்று வந்தேன். தற்பொழுது வரை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக சமூக வலைதளம் மூலம் எங்கள் கிராமத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் இளைஞர்களிடம் நிதி திரட்டி அதில் வரும் பணத்தைக் கொண்டு தற்பொழுது எங்கள் பகுதியில் முதற்கட்டமாக மண்சாலை அமைத்து வருகிறோம். தமிழக அரசு தலையிட்டு எங்களுக்கு தார் சாலை அமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார் .
இரு கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கிராமத்திற்கு சாலை அமைத்துள்ளதை பலரும் கண்டு வெகுவாக பாராட்டி வருகின்றனர்