கடலூர் அருகே விபத்தில் சிக்கியவரை மாவட்ட எஸ்.பி மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கடந்த 9-ம் தேதி இரவு ரோந்து பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது குறிஞ்சிப்பாடி காவல் நிலைய சரகம் மீனாட்சிபேட்டை அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
அப்போது, அடிபட்டு ரோட்டில் கிடந்த தோப்புகொல்லை கிழக்குத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரபு (35) என்பவரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உடனடியாக தனது காரில் இருந்து இறங்கி ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டு தன் வாகனத்தோடு வந்த அதிரடிப்படை வாகனம் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
மேலும் விபத்தில் சிக்கியவருக்கு அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் அனுமதித்த மாவட்ட எஸ்.பியின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.