கடலூரில் நியூ சினிமா திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர்.
கடலூர் மாநகர மையப் பகுதியில் அமைந்துள்ள நியூ சினிமா திரையரங்கில் வழக்கம் போல் நேற்று 11.5.2023 மதிய நேரக் காட்சியில் பொன்னியின் செல்வன் பாகம்- 2 திரைப்படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் திடீரென புகை மூட்டத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.
தீ பற்றி எரிவதைக் கண்டு மிரண்ட ரசிகர்கள் மூச்சுத் திணறல் காரணமாக ஒருவரை ஒருவர் முண்டியடித்து அலறி அடித்துக் கொண்டு வெளியில் வர ஓட்டம் பிடித்தனர். இதனைக் கண்ட திரையரங்கின் ஊழியர்கள் கருவியைக் கொண்டு தீயை அணைத்தனர்.
அதன் பிறகு படம் பார்க்க வந்த அனைவருக்கும் டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பி வழங்கி அனுப்பி வைத்தனர். இதனைக் கேள்விப்பட்டு செய்தி சேகரிக்கச் சென்ற சில பத்திரிக்கையாளர்களை வெளியே செல்லுமாறும், இங்கு ஒன்றும் ஆகவில்லை என தியேட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். ஏ.சி.யிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வந்தது.