மணிப்பூர் மாநில அரசைக் கலைக்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுடன் தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு இனக் குழுக்கள் இடையே நடைபெற்று வரும் கலவரத்தை நிறுத்த கோரியும் மணிப்பூர் மாநில அரசைக் கலைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் திமுக மகளிர் அணியினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தைக் கையில் எடுத்து போராட்டத்தில் இறங்கி இருக்கிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழு. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவைச் சேர்ந்த மெரினா பிரபு, கிருஷ்ணமூர்த்தி, மகேஷ் குமார் ஆகியோர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டலம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஎஸ்ஐ திருமண்டல லே செயலாளர் கிப்ட்ஸ்டன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருமண்டலத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் 20 பேர் கலந்து கொண்டனர். ஆனால் திருமண்டல நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் மொத்தமே 200 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராளிகளுடன் கைகோர்த்து ஏன்? திருமண்டல செயலாளர் கிப்ட்ஸ்டனிடம் கேட்டோம். "மணிப்பூர் கலவரத்தைப் பொருத்தவரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 250க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.. சேதப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அந்த கலவரத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அது அவர்களது முதல் கடமை. ஆனால் மத்திய மாநில அரசுகள் செய்யத் தவறிவிட்டன.
அதனால் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம் பண்ண வேண்டியது எங்களது கடமையாகிப் போனது. பெரும்பான்மையான கிறிஸ்தவ மக்கள் நாம் எதற்காகப் போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் கிறிஸ்தவ பாஸ்டர் கார்த்தி கமாலியேல் என்பவர் எங்களுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று நாங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்கள் அந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை" என்றார்.