புதுக்கோட்டை: மதமாற்றத்திற்கு உடன்படாத இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை- இது ’தி மணப்பாறை ஸ்டோரி’

மதமாற்ற நிர்பந்தம் தொடர்பான எந்த செக்சனையும் போடாமல் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.
புதுக்கோட்டை: மதமாற்றத்திற்கு உடன்படாத இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை- இது ’தி மணப்பாறை ஸ்டோரி’

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மணப்பாறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 1-ம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. 2-ம் தேதி சிறுமியின் தாயார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில் அன்றைய தினம் அந்த நிறுவனத்தில் வேலைக்கு வந்த சிறுமி வேலை முடிந்து கிளம்பிய விஷயம் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் செல்போன் எங்கே உள்ளது என்பதை சைபர் கிரைம் உதவியுடன் காவல் துறையினர் ஆராய்ந்தனர். அப்போது செல்போன் பெங்களூருவில் இருப்பதை அறிந்து, 4ம் தேதி வழக்கு பதிவு செய்து ஒரு போலீஸ் குழு பெங்களூரு விரைந்தது.

விசாரணையில் வேலூரைச் சேர்ந்த முபாரக் அலி என்பவர் இந்த பெண்ணின் செல்போன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து தொடர்பு ஏற்படுத்தி பேசி பழகிய விதத்தில் அந்த பெண்ணை பெங்களூரு அழைத்துச் சென்றது தெரியவந்தது. மணப்பாறையை விட்டு கிளம்பியதும் ஏற்கனவே முபாரக் அலி கொடுத்த வாக்குறுதி படி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த சிறுமி வற்புறுத்தி உள்ளார். ஆனால் 'பார்த்தோம், பேசினோம், பழகினோம்.’அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். திருமணம் எல்லாம் செய்யும் எண்ணம் இல்லை. திருமணம் செய்ய வேண்டும் என்றால் நீ முஸ்லிமாக மதம் மாற வேண்டும்' என்று முபாரக் மறுத்துள்ளார். முஸ்லிமாக மதம் மாற அந்த சிறுமி சம்மதிக்கவில்லை. கூடவே அந்தப் பெண்ணை வற்புறுத்தி பாலியல் உறவு கொண்டுள்ளார்.

முடிவு தெரியாமல் தொடங்கிய இந்த பயணத்தை எங்கே கொண்டு போய் முடிப்பது என்று தெரியாமல் பெங்களூருவில் தனது வேலூர் நண்பர்கள் ரியாஸ் மற்றும் சதாமிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்துவிட்டு முபாரக் போய்விட்டார். நண்பர்கள் இருவரும் நண்பன் விட்டுச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். போலீசும் இவர்களை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அந்த சிறுமியும் தனது அண்ணனுக்கு போன் செய்து புத்தி கெட்டுப் போய் வீட்டுக்கு தெரியாமல் வந்த சில நாட்களிலேயே தான் அடைந்த மனவேதனை உடல் வேதனையை சொல்லி அழுது தன்னை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

'மதம் மாற மறுத்துவிட்ட பெண்ணை வைத்துக் கொண்டு இனிமேல் காவல் காக்க முடியாது, ஊருக்கே அனுப்பிவிடுவோம்' என்று ரியாஸ் மற்றும் சதாம் இருவரும் பெங்களூரு ரயில்வே ஜங்ஷனுக்கு அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்த அதே வேளையில் போலீசும் அவர்களை நெருங்கி மூவரையும் அள்ளியது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முபாரக்கையும் கைது செய்தனர்.

முபாரக் தன்னை போனில் தொடர்பு கொண்டு அழைத்துச் சென்ற விதம். அதன் பின்னர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு தனது நண்பர்கள் ரியாஸ், சதாம் வசம் ஒப்படைத்துவிட்டு போன கதை. அவர்கள் தன்னை மதம் மாறச் சொல்லி துன்புறுத்தியது மற்றும் உடல் ரீதியாக அனுபவித்தது உள்ளிட்ட விஷயங்களை போலீசில் சொல்ல, அவர்கள் மூவரையும் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர் மணப்பாறை போலீஸார்.

நேற்று ஆறாம் தேதி மணப்பாறையில் நடந்த இந்த காவல்துறை விசாரணை தொடர்பான விஷயங்களை மிக, மிக ரகசியமாக வைத்துக் கொண்டது காவல்துறை. இப்போதுதான் "தி கேரளா ஸ்டோரி" படம் வெளியாகி, படம் வெளியான தியேட்டர் வாசல்கள் எல்லாம் போராட்டக் களங்களாக இருக்கும் நிலையில் மணப்பாறையில் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்கிறது என்கிற விஷயம் வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சனை ஏற்படும் என்று அடக்கி வாசித்ததுடன் மதமாற்ற நிர்பந்தம் தொடர்பான எந்த செக்சனையும் போடாமல் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.

- ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com