மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் கனிவண்ணன். சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள உப்பனாற்றங்கரையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் தலையில் காயத்துடன் கனிவண்ணன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
தகவல் அறிந்த சீர்காழி போலீசார் கனிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதற்கிடையே கனிவண்ணனின் உறவினர்கள் கொலையாளிகளை கண்டுபிடிக்க கோரி சீர்காழி-மயிலாடுதுறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் மயிலாடுதுறை மாவட்ட [பொறுப்பு] எஸ்.பி ஜவஹர் சமாதானம் பேசியதால் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் கனிவண்ணன் உடல் தடய அறிவியல் சோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் அளவிற்கு என்ன விரோதம் இருக்கக்கூடும்? திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதில் எதாவது பிரச்னையா? அல்லது கனிவண்ணனுக்கு காதல் பிரச்னை எதாவது இருந்து அதில் கூட கொலை செய்யப்பட்டிருக்க கூடுமோ? என, பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கனிவண்ணனை சீர்காழி தென்பாதி ஆர்.வி.எஸ் நகரில் வசித்து வரும், ஆந்திர மாநிலம் சி.ஆர்.பி.எஃப்-இல் துணை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் தேவேந்திரன் என்பவர் தன்னிடம் இருந்த உரிமம் இல்லாத 9 எம்.எம் பிஸ்டலால் சுட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு பிஸ்டல், இரண்டு ரிவால்வர், ஒரு ஏர்கன் துப்பாக்கி மற்றும் புல்லட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இக்கொலை குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொலையான கனிவண்ணனும், தேவேந்திரனும் நண்பர்களாக இருந்துள்ளனர். இருவருக்கும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. தேவேந்திரனின் குடும்பத்தினர் குறித்து உறவினர்களிடம் கனிவண்ணன் தவறாக பேசியிருக்கிறார்.
இதனால் கோபம் கொண்ட தேவேந்திரன் தன்னிடமிருந்த 9 எம்.எம் பிஸ்டலை எடுத்துக்கொண்டு உப்பனாற்றங்கரையில் ஒதுக்குப்புறமாக யாருடனோ கனிவண்ணன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு செல்போனை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.
இதுதொடர்பாக விசாரணையில் கனிவண்ணனின் நண்பர்கள் சிலர் ஏற்கனவே தேவேந்திரன் வீட்டில் துப்பாக்கி இருப்பதை பார்த்திருக்கின்றனர். இந்த தகவல் மூலம் தேவேந்திரனை பிடித்து விசாரித்தபோது அனைத்து உண்மையையும் கூறியிருக்கிறார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் உரிமம் இன்றி வைத்திருந்த பிஸ்டல், ரிவால்வர் மற்றும் ஏர்கன் துப்பாக்கியை எங்கே வாங்கினார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமையல் மாஸ்டர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமும், இதுதொடர்பாக சி.ஆர்.பி.எஃப் துணை உதவி ஆய்வாளர் கைது செய்யப்ப்பட்டிருக்கும் சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
- ஆர்.விவேக் ஆனந்தன்