வேதாரண்யம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளரின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்ததில் ஆலை உரிமையாளரின் தந்தை பலி. மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மணி
உயிரிழந்த மணி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் பட்டாசு ஆலை உரிமையாளரின் தந்தை மணி மற்றும் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின.

இதில் மணி படுகாயமடைந்து தூக்கி வீசப்பட்டு தலை சிதறி பலியானார். மேலும் ஆலையில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த மேரிசித்ரா, கலாவதி, மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

வெடி விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் வேதாரண்யம் மற்றும் வாய்மேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வெடிவிபத்தில் படுகாயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள்
விபத்தில் படுகாயமடைந்தவர்கள்

இது குறித்து தகவல் அறிந்தவுடன் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயேந்திர சரஸ்வதி, ராதாக்கிருஷ்ணன் பசுபதி மற்றும் போலீசார் விரைந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விபத்தில் காயமடைந்த பெண்களிடம் பேசினோம், "எப்போதும் வெடிமருந்தை கலக்கி இடிக்கும்போது தொழிலாளர்களை வெளியே செல்லும்படி சொல்லிவிட்டுத்தான் இடிப்பார்கள். ஆனால் அன்றைய தினம் அவர்களும் சொல்லவில்லை. நாங்களும் வெளியே செல்லவில்லை. எது நடக்காது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது" என்றனர் வேதனையுடன்.

அப்பகுதி மக்களிடம் பேசினோம், "பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்தபோது ஏதோ அணுகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. அத்துடன் வீட்டு கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து விழுந்தது. பத்து நிமிடம் என்ன நடக்கிறது? என்றே தெரியாமல் பயந்துபோய் இருந்தோம்" என்றனர் அச்சம் விலகாத குரலில்.

- ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com