காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளிலும், கோயில் வளாகங்களிலும், பள்ளி வளாக பகுதிகளிலும் கால்நடைகள் கேட்பாரற்று சுற்றித்திரிவதால் சாலையை பயன்படுத்தும் பள்ளி மாணவ, மாணவிகள், பொது மக்கள், மாநகருக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் என பல தரப்பினர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனையடுத்து இதற்கு தீர்வுக்கானும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து நகர்ப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி கோசாலையில் ஒப்படைக்கும் பணியை மேற்கொள்ள அண்மையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மூலம் குழு அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில், பொது இடங்களில் சுற்றித்திரிந்த 15 கால்நடைகள் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தான் ஆசைஆசையாய் வளர்த்து வந்த மாடு சினையாக இருந்த நிலையில் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது தெரியவந்த, அம்மாட்டை வளர்த்து வந்த பெண் கதறி அழுதபடி அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சியதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின் கால்நடை மருத்துவர் அம்மாட்டினை சோதனை செய்ததில் அம்மாடு சினையாக் இருப்பது உண்மைதான் என கண்டறியப்பட்டது. பின், அம்மாட்டை வளர்த்து வந்த பெண்ணிடம் இனி மாட்டை சாலைகளில் சுற்றித் திரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என எச்சரித்துஅபராதமாக ரூ.5 ஆயிரத்தை விதித்து மாட்டை ஒப்படைத்தனர்.