ஆவடி அருகே சாலைகளில் சுற்றி திரியும் கால்நடை குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாரிகளின் உத்தரவை ஆவடி மாநகராட்சி சுகாதார செயல் அலுவலர் மொய்தீன் காற்றில் பறக்கவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.எம்.டி.ஏ காலனியில் பள்ளிக்குச் சென்ற மாணவியை சாலையில் சுற்றித்திரிந்த பசு பயங்கரமாக முட்டிய காட்சி சமூக வலைதலங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரியக்கூடாது. அப்படி சுற்றித்திரிந்தால் மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, சென்னை சாலைகளில் சுற்றித்திருந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச்சென்றனர்.
இந்த நிலையில், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் நடுசாலைகளில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றி திரிவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக திருமுல்லைவாயில் வைஷ்ணவி ஆலயம் அருகே இன்று சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலையில் எருமை மாடுகள் சாலையின் நடுவே சென்று கொண்டிருக்கும்போது, சாலையில் நடந்து வந்த எருமை மாடுகள் இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஓடியது. இதனால் உணவு டெலிவரி செய்யும் நபர் நிலைகுலைந்து சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை செயல் அலுவலர் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும். உரிமை கோராத கால்நடைகளை கோசாலையில் பிடித்துக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.