குற்றாலத்தில் சட்டமன்ற உறுதிமொழிக்குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ சாதாரண வேட்டி, சட்டை, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு மாறுவேடத்தில் ஆய்வு செய்தார்.
தமிழக சட்டமன்ற உறுதிமொழிக்குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ, மற்றும் எம்.எல்.ஏக்கள் அண்ணாதுரை, அருள், மோகன் உள்ளிட்டோர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். குறிப்பாக குற்றாலம் அரசு பங்களாவில் தங்கி அதிகாரிகளிடம் ஆலோசித்தனர்.
வேல்முருகன் எம்.எல்.ஏ இன்று அதிகாலை சாதாரண வேட்டி, சட்டை, தலையில் முண்டாசு சகிதம் மாறுவேடத்தில் அருவிகளை ஒரு ரவுண்ட் வந்திருக்கிறார். அப்போதுதான் அருவிகளில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்படாதது குறித்து தெரிய வந்திருக்கிறது. இது குறித்து வேல்முருகன் கூறுகையில், மெயின் அருவிக்கு சென்று பார்த்தேன். அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பெண்கள் குளிப்பதை படம் மற்றும் வீடியோ எடுப்பதை தடுக்க, நடுவில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறேன். தவிர, அங்குள்ள பெண்கள் உடை மாற்றும் அறையும் சரியில்லை, அதை வேறு மறைவான இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறது. குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் 1.55 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
கோடிக்கணக்கில் அரசு செலவழித்தாலும் கூட அங்கு செல்கிற ரோடு சரியில்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன் என்றார். அதன்பின்னர் உறுதி மொழிக்குழு அண்மையில் குற்றாலீஸ்வரர் கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த 40 தாற்காலிக கடைகள் தீப்பிடித்த இடத்தைப் பார்வையிட்டார், அவரிடம் வியாபாரிகள் தங்களுக்கு நிவாரணத் தொகை வேண்டும் என்று ம கொடுத்தனர்.
முதல்வர் ஸ்டாலினிடம் பேசி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். பின்னர் தொழிலாளர் தங்கும் திரு.வி.க விடுதி, புதிதாய் கட்டப்பட்டிருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையப்பணிகளையும் பார்வையிட்டனர். மெயின் அருவியில் அடிப்படை வசதிகள் இல்லாததனால் உறுதி மொழிக்குழு அதிகாரிகளிடம் கோபப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.