சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஜூன் 14ம் தேதி அதிகாலை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்தபோது ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய சென்னை, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஜூன் 28 ஆம் தேதி வரையில் செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் 15ம் தேதி சென்னை, காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
அங்கு, மருத்துவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி கடந்த ஜூன் 21ம் தேதி செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு செந்தில் பாலாஜி தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிந்து கடந்த ஜூன் 28ம் காணொலி வழியாக ஆஜரானார். இதைத்தொடர்ந்து அவருடைய நீதிமன்ற காவலை, ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அதன்படி நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி வழியாக ஆஜரானார்.
இதை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி பதிவு செய்துகொண்டு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற ஜூலை 26ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.