தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதோடு செங்கல்பட்டு மாவட்டத்திலும் பேருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி, வானதி சீனிவாசன், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு செல்கிறார்.
இச்சம்பவத்தின் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக 136 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 199 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 57 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 109 லிட்டர் சாராயம், 450 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 88 பேர் மீது கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 47 பேர் கைது செய்யப்பட்டு, 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கள்ளக்குறிச்சியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.