எனக்கே இப்படின்னா..சாதாரண மக்களின் நிலை?-புலம்பும் திருச்சி கவுன்சிலர்

அதைவிட போலீஸ் என்ன நடத்துற விதம் மிகப்பெரிய வேதனையா இருக்கு
திருச்சி 39வது வார்டு கவுன்சிலர்
திருச்சி 39வது வார்டு கவுன்சிலர்

இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என திருச்சி காங்கிரஸ் கவுன்சிலர் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும், திருச்சி மாநகராட்சியின் 39வது வார்டு கவுன்சிலராகவும் இருப்பவர் ரெக்ஸ். எந்த வம்பு தும்புக்கும் போகாத அமைதியான மனிதர் என்று பெயர் எடுத்தவர். அவரது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய இருசக்கர வாகனம் திருட்டுப் போனது ஒரு வேதனை என்றால், காவல்துறை தன்னுடைய புகாரை கையாண்ட விதத்தை அதைவிட பெரிய வேதனையாக சொல்லி புலம்பினார் அவர்.

"நேற்று முன்தினம் இரவு திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் என் வீட்டு வாசலில் வச்சிருந்த ஹோண்டா சைன் டூவீலர காலையில காணோம். உடனே சிசிடிவி கேமராவை போட்டு பார்த்தால் ராத்திரி 11 மணிக்கு ஒரு ஆள் இந்த சந்துக்குள்ள நடந்து வந்து வண்டியை தள்ளிகிட்டு போய் வயர ஏதோ செய்து ஸ்டார்ட் பண்ணி எடுத்துக்கிட்டு போற காட்சி பதிவாகி இருந்தது. உடனே அதை காப்பி பண்ணி எடுத்துக்கிட்டு கண்ட்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன்ல போய் புகார் கொடுத்தேன். அங்கே அவங்க சரியா நடவடிக்கை எடுக்கலன்னு ஐஎஸ் ஏசிக்கு 5 தரம் போன் பண்ணுனேன். அவரும் போன் எடுத்து பதில் சொல்லல..

நேற்று காலை 11 மணிக்கு கொடுத்த புகாருக்கு இன்னை வரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்னைக்கு போய் கேட்டா, 'ஆமா ஏதோ சிசிடிவி காட்சி எல்லாம் கொடுத்தீங்க இல்ல' அப்படின்னு சொல்லிட்டு அதை இப்பதான் எடுத்தே பாக்குறாங்க.

இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் திருட்டு வாகனங்களை பிரிச்சி விக்கிற பகுதிகள் எல்லாம் இருக்கு. போலீசார் துரிதமா செயல்பட்டா என் வண்டி கிடைக்க வாய்ப்பு இருந்துச்சு. சிசிடிவி காட்சியை போட்டு பார்க்கவே 24 மணி நேரம் ஆகுதுன்னா எனக்கு இனிமே சுத்தமா நம்பிக்கை இல்லாம போயிருச்சு.

இத்தனைக்கும் கன்டோன்மென்ட் ஏசி கென்னடி எனக்கு நல்லா தெரிஞ்சவர். கேட்டா க்ரைம்ல இன்ஸ்பெக்டர், எஸ்ஐ இல்லன்னு சொல்றாங்க. திருச்சியில் நான் குடியிருக்கிற கன்டோன்மென்ட் பகுதி ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, முக்கியமான கல்வி நிறுவனங்கள், ஆல் இந்தியா ரேடியோ, கார்ப்பரேஷன் அலுவலகம், இன்னும் பல விஐபிகள் குடியிருப்பு, பத்திரிகை அலுவலகங்கள் இருக்கிற பகுதி. இங்கே இருக்கிற ஸ்டேஷனிலேயே இன்ஸ்பெக்டர் இல்ல எஸ்ஐ இல்லன்னா இன்னும் புறநகர் பகுதிகளில் நிலைமை எப்படி இருக்கும்னு நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு. அப்புறம் எப்படி குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் ? கண்டுபிடிக்க முடியும் ? பொது வாழ்க்கையில இருக்கிற ஒரு மனுசனா என் வண்டி காணாம போன வேதனையை விட எனக்கு இந்த வேதனை தான் அதிகமாக இருக்கு.

திருமணத்திற்கு மாமனார் வீட்டில் இருந்து கொடுத்த டூவீலர் இது இதைக்கூட பத்திரமா வச்சுக்க முடியலன்னு மைத்துனர், மாமனார் எல்லாம் என்னை கேவலமா பேசுறாங்க. குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருந்த வாகனம் காணாமல் போனது ரொம்ப பெரிய இழப்பாக இருக்கிறது.

அதைவிட போலீஸ் என்ன நடத்துற விதம் மிகப்பெரிய வேதனையா இருக்கு" என்று புலம்பினார் அவர்.

'நீங்க எல்லாம் முட்டுக்கொடுத்து தானே விடியல் கொண்டு வந்தீங்க?' என்று மாற்றுக் கட்சி கவுன்சிலர்கள் ரெக்ஸை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com