பருத்தி சாகுபடி: விவசாயிகளை காப்பாற்றுமா அரசு? - மயிலாடுதுறை சோகம்

மழையில் நனைந்த பஞ்சு நிறம் மாறி தரம் குறைந்ததால் மிகக்குறைவான விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டது
பருத்தி சாகுபடி: விவசாயிகளை காப்பாற்றுமா அரசு? - மயிலாடுதுறை சோகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், பருத்தி பஞ்சு அறுவடை விவகாரத்தில், மழையில் பஞ்சு நனைந்து வீணாகிவிட்டதாலும், மழையில் நனைந்த பஞ்சு நிறம் மாறி தரம் குறைந்ததால் மிகக்குறைவான விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் சுமார் 6,000 ஏக்கரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த வருடம் 4,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்திருந்த விவசாயிகள் இந்த வருடம் அதைவிட அதிகமான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

காரணம், கடந்த வருடம் பருத்தி கிலோ ரூ.120 -க்கு கொள்முதல் செய்யப்பட்டதால், இந்த வருடமும் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வாய்ப்பிருக்கும் என நினைத்து விவசாயிகள் அதிக ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்தனர்.

கடந்த சில வாரங்களாக பருத்தி அறுவடை செய்து வாரந்தோறும் திங்கட்கிழமை எருக்கூரில் உள்ள பருத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

இதுமட்டும் அல்லாமல் ஒரு சில தனியார் வியாபாரிகளிடம் பருத்தியை விற்பனை செய்கின்றனர். இந்த வருடம் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் போதிய நீர் இருந்ததாலும் பருத்தி செழிப்பாக வளர்ந்து நல்லபடியாக வெடித்து அதிக மகசூல் கொடுத்தது.

ஆனால், எதிர்பாராதவகையில் கடந்த 10 மற்றும் 11 தேதிகளில் சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டாரங்களில் கோடை மழை அதிக அளவில் பெய்யவே மழை நீரில் நனைந்த பருத்திச் செடிகள் ஈரமாகி பருத்திக்காய்கள் வெடிக்காமல் போய்விட்டது.

இதனால், பருத்தி பஞ்சு அறுவடை செய்யமுடியாமல் போனதோடு வெடித்த நிலையில், இருந்த பஞ்சும் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. மழையில் நனைந்த பஞ்சு நிறம் மாறி தரம் குறைந்ததால் மிகக்குறைவான விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டது.

இது குறித்து, பாதிக்கப்பட்ட விவசாயி ரவி நம்மிடம் பேசியபோது, “ பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் இதை எல்லாம் சமாளித்து பருத்தியை அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு எதிரே வெட்ட வெளியில் பஞ்சு மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தோம்.

அப்போதும் மழை பெய்து மூட்டைகள் அனைத்தும் நனைத்துவிட்டது. இதனால் 1000 குவிண்டாலுக்கும் மேற்பட்ட ஈரமான பஞ்சுகளின் விலை மிகவும் சரிந்துவிட்டது. இதனால், கடந்த வருடத்தைவிட பருத்தி கொள்முதல் விலை பாதியாக குறைந்திருக்கிறது.

கடந்த வருடத்தில் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால் ஆசைப்பட்டு இந்த வருடம் அதிக ஏக்கரில் பருத்தி பயிர் செய்தும் அதிகமாக பெய்த கோடை மழை எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டது.

நாங்கள் எதிர்பார்த்த விலைக்கு கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், விவசாயிகள் அனைவரும் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கின்றனர்.

எனவே, விவசாயிகள் நலன் கருதி ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளாமல் வழக்கமான விலைக்கு பஞ்சை கொள்முதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.” என்றார் சோகக்குரலில்.

இது குறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளோ, “கோடை மழை என்பது எதிர்பாராத ஒன்று. மழையில் நனைந்த பஞ்சுகள் மஞ்சள் கலருக்கு மாறிவிடுவதால் வியாபாரிகள் அதனை கொள்முதல் செய்வதில்லை.

அப்படியே கொள்முதல் செய்தாலும் குறைந்த விலைக்கே கேட்கின்றனர். இந்த பிரச்னை குறித்து அரசிடமும் தெரிவித்துள்ளோம்” என்றனர்.

- ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com