பேரூராட்சியில் ஊழலோ, ஊழல் - சென்னை டூ சேலம் அதிகாரிகள் விசிட்

சேலம், தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்னையிலிருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினர்.
தம்மம்பட்டி பேரூராட்சி
தம்மம்பட்டி பேரூராட்சி

சேலம் மாவட்டத்தில் இருக்கிறது தம்மம்பட்டி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டுகளில் 13 திமுக கவுன்சிலர்களும், 3 அதிமுக கவுன்சிலர்களும், 2 காங்கிரஸ் கவுன்சிலர்களும் உள்ளனர்.

தம்மம்பட்டி பேரூராட்சி தலைவியாக இருப்பவர் கவிதா. கவிதாவும் அவருடைய கணவர் ராஜா இருவரும் தம்மம்பட்டி பேரூராட்சியில் மற்ற கவுன்சிலர்களை கேட்காமல், வாங்காத பொருளை வாங்கியதாக பில் காண்பித்துள்ளனர். அதன் மூலம் நிறைய பணத்தை எடுத்துள்ளனர். இதனால் கடந்த 7 மாதங்களாக பேரூராட்சி மன்ற கூட்டம் நடத்தாமல் இருந்ததாகவும் பல்வேறு புகார்கள் மேலிட அதிகாரிகளுக்கு சென்றுள்ளது

பேரூராட்சி தலைவி கவிதா மற்றும் கணவர் ராஜா ஆகியோரை கண்டித்து திமுகவைச் சேர்ந்த 10 கவுன்சர்களும், அதிமுகவைச் சேர்ந்த 3 கவுன்சிலர்களும், காங்கிரசைச் சேர்ந்த 2 கவுன்சிலர்களும் தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு பல போராட்டங்களை நடத்தினர்.

மேலும் பணம் கையாடல் சம்பந்தமாக கணவன் மனைவி மீது நடவடிக்கை எடுக்க கூறி தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கும், சென்னை பேரூராட்சி இயக்குனர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது பேரூராட்சி அலுவலகம் வருகைப் பதிவேடு, பேரூராட்சியில் உள்ள புக் மற்றும் வங்கியில் பணம் எவ்வளவு உள்ளது எனவும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் தம்மம்பட்டி பேரூராட்சியில் கடந்த வாரம் செயல் அலுவலராக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இருந்து தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த உஷாவிடம் வரவு, செலவு கணக்கு குறித்து கேள்விகளை எழுப்பினர்.

மேலும் புதியதாக வந்து பொறுப்பேற்றதால் இது சம்பந்தமாக எனக்கு தெரியாது என்று உஷா தெரிவித்துள்ளார். அதனால் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பணியாளர்களிடம் தனித்தனியாக அழைத்து கையெழுத்துகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்று மாலை வரை நடைபெற்றதால் அலுவலகத்தில் பெரும் பரபரப்பாக இருந்தது.

இது குறித்து தம்மம்பட்ட கவுன்சிலர்களிடம் பேசினோம், "கழிவறை கட்டியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. அதை பற்றிய புகார் சென்னைக்கு போயிருந்தது. சென்னை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்தனர். சேலம் பேரூராட்சி இயக்குநர் அலுவலகத்தில் இருந்தும் ஆட்கள் வந்தனர். ஆய்வு நடந்தது, ஆவணங்களை ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர்" என்றார்கள்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com