திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து சர்ச்சைப் பேச்சு: கைதான மணியனுக்கு செப்.27ம் தேதி வரை சிறை!

கைதான RBVS மணியன்
கைதான RBVS மணியன்

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் கைதான இந்து ஆன்மீக பேச்சாளர் RBVS மணியனை செப்டம்பர் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் நிர்வாகியான RBVS மணியன், பட்டியலின பழங்குடியின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பட்டியலின, பழங்குடியினர், அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை பற்றி அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் இரா.செல்வம் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்திய தண்டனை சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 8 பிரிவுகளில் மணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று (செப் 14) அதிகாலை நான்கரை மணியளவில் மாம்பலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதியிடம் விளக்கம் அளித்த மணியன், தனக்கு ட்விட்டர் கணக்கே இல்லை என்றும், எதையும் அதில் பதிவிடவில்லை என்றும், தான் பேசியதில் தவறான புரிதல் காரணமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தன்னுடைய வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனை ஆகிய காரணங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

உடல் நிலையை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, செப்டம்பர் 27ஆம் தேதி வரை மணியனை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com