பெல் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் வேலையில் பணியமர்த்தக்கோரி திருவள்ளுவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் 7 ஆயிரத்திற்கும் மேலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ உதவி வழங்கும் வகையில் பெல் குடியிருப்பு வளாகத்தில் பெல் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள், இரத்தப் பரிசோதனை ஆய்வக பணியாளர்கள், எக்ஸ்ரே உட்பட பல்வேறு பணிகளில் சுமார் 160 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்தப் பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் சரியாக ஊதியம் வழங்கவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு அவர்களுக்கு உரிய ஊதியம் கிடைத்தது. அப்படி போராட்டத்தின் ஒரு பகுதியாக கருப்பு பேஜ் அணிந்து வேலைக்கு வந்த சுமார் 16 பேரை சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இதை கண்டிக்கும் வகையில் பெல் பாய்லர் ஆலை போலீசார் மற்றும் திருவெறும்பூர் தாசில்தார் ஆகியோரிடம் இது குறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனு கொடுத்தனர். மேலும், வேலையில் இருந்து நீக்கிய தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தமானது முடிவற்ற நிலையில் தற்போது புதிய தனியார் ஒப்பந்த நிறுவனமும் இவர்களை வேலைக்கு அமர்த்தவில்லை. இதனால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள பெல் மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பணியாளர்களை பணியில் சேர்க்கக் கோரியும் இதை துளியும் செவி கொடுத்து கேட்காத புதிதாக வந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தையும், பெல் நிர்வாகத்தையும், கண்டித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பியும், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெல் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் பெல் வளாக பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.
- ஷானு