திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (30). இவரது மனைவி தீபிகா (27). தம்பதிக்கு திருமணமாகி பிறந்து 22 நாட்களே ஆன கைக்குழந்தை உள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மாதம் 22,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த ஊழியராக சுபாஷ் பணியாற்றி வந்தார்.
தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வந்த சுபாஷ் ஜூலை 1ம் தேதி முதல் ஊக்கத்தொகை ஊதிய அடிப்படையில் பணி மாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே கடந்த மே, ஜூன் ஆகிய 2 மாதங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சுபாஷ் மனஉளைச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக சுபாஷ் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவரது இறப்புக்கு பணியால் ஏற்பட்ட மனஉளைச்சலே காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள் மற்றும் அவருடன் பணி பணிபுரிவோர் திருவாரூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ‘பாதிக்கப்பட்ட சுபாஷின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதே திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பணிபுரியும் 1248 ஊழியர்களுக்கு மீண்டும் தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.