உடற்பயிற்சி ஆசிரியை டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற மாணவி- பெற்றோர் கலெக்டரிம் புகார்

ஆசிரியர்களுக்குள் நடக்கும் ஈகோ சண்டைக்கு எங்கள் மகளை பலிகடா ஆக்குகின்றனர்.
உடற்பயிற்சி ஆசிரியை டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்ற மாணவி- பெற்றோர் கலெக்டரிம் புகார்

திருவாரூர் அருகே உடற்கல்வி ஆசிரியை டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்த மாணவியின் நிலை குறித்து பெற்றோர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

திருவாரூர் அருகே கீராந்தி மேலத்தெரு பகுதியைச்சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மூத்த மகள் ஆலத்தம்பாடியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை ஒருவர் சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டினாராம். இதனால் அவமானமடைந்த மாணவி கடந்த 1ம் தேதி காய்ச்சலுக்கான மாத்திரைகளை அதிக அளவில் விழுங்கி தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து குணமடைந்துள்ளார்.

இதனையடுத்து, மீண்டும் கடந்த 4ம்தேதி பள்ளிக்கு சென்ற மாணவியின் புத்தகப்பையில் யாரோ சிலர் பீடி, சிகரெட் மற்றும் போதை பாக்கு பொட்டலங்கள் ஆகியவற்றை வைத்திருந்துள்ளனர்.

எதேச்சையாக பையை திறந்து பார்த்த மாணவி மேற்படி பொருட்கள் இருந்ததை பார்த்து மீண்டும் அதிர்ச்சியில் மயக்கமடைந்துள்ளார். பள்ளி நிர்வாகிகள் அவரை சிகிச்சைக்காக ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் புகார் அளித்துள்ளனர்.

மாணவியின் பெற்றோர், “பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியை எங்கள் மகளுக்கு அளித்து வந்த டார்ச்சரால் 10க்கும் அதிகமான பாரசிட்டமால் மாத்திரையை விழுங்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். ஆனால் மீண்டும் அவளுக்கு மேற்படி உடற்கல்வி ஆசிரியை மறைமுக தொல்லைகளை கொடுத்துவருகிறார். ஆசிரியர்களுக்குள் நடக்கும் ஈகோ சண்டைக்கு எங்கள் மகளை பலிகடா ஆக்குகின்றனர். தற்போது மீண்டும் அவளது பையில் பீடி, சிகரெட், போதை பாக்குகளை வைத்து அதிர்ச்சியளித்ததில் மறுபடியும் மயங்கிவிழுந்து சிகிச்சை பெற்றுவருகிறாள். எங்கள் மகளுக்கு தொடர்ந்து நடந்துவரும் இந்த கொடுமை நிறுத்தப்படவேண்டும். சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம்.” என்றனர் சோகத்துடன்.

இந்த புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், “சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்துள்ள பிரச்னைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அது குறித்த அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்துள்ளோம். இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்திவருகின்றனர்.” என்றார்.

மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்

-ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com