தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே இன்று காலை பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது கன்டெய்னர் லாரி. அந்த லாரியின் ஓட்டுனர் கவனக்குறைவாகவும், அதிவேகமாக சென்றதாகவும் கூறப்படுகிறது.
அப்பொழுது கன்டெய்னர் லாரியானது தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலத்தை கடக்கும்போது ஓட்டுனர் அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் சென்றதில் முன்னே சென்று கொண்டிருந்த சிறிய ரக சரக்கு வாகனம் மற்றும் இரண்டு ஈச்சர் வாகனங்கள் மீது வேகமாக மோதியதில் மூன்று வாகனங்களும் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரியும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் சாலை பராமரிப்பு குழு மற்றும் தொப்பூர் காவல்துறையின் துரித நடவடிக்கையால் உடனடியாக வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
- பொய்கை.கோ.கிருஷ்ணா