மயிலாடுதுறை போலீஸ் எஸ்.பி அலுவலகம் அருகே 5 கடைகளில் பணம் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் பகுதியில், மளிகை மொத்த விற்பனை நிலையங்களும், தானிய மண்டிகளும் அதிக அளவில் அமைந்துள்ள முக்கிய கடைவீதியாகும்.
இந்த கடைவீதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள 3 மளிகை மொத்த விற்பனை கடைகள் மற்றும் ஒரு பேன்சி ஸ்டோர் மற்றும் ஒரு குடோன் ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே சென்று பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
முதலாவதாக சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் புகுந்த மர்ம நபர்கள், உள்பூட்டை உடைக்க முயன்றனர். இதனால், பாதியிலேயே விட்டுவிட்டு அருகில் இருந்த சாதிக் அலி, முகமது அப்துல்காதர், பாலபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான மளிகை கடைகள், குடோன், பேன்சி கடை ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்து உள்ளே இருந்த ஆயிரம், 2 ஆயிரம் என சுமார் ரூ. 5 ஆயிரம் அளவில் திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சாமிநாதன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மேலும், அங்கிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே இடத்தில் 5 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு நடந்த திருட்டு சம்பவம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலடி கடைவீதியில் இருந்து சுமார் 3,00 மீட்டர் தொலைவில்தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து மயிலாடுதுறை போலீஸாரிடம் பேசினோம். "இப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் திருடர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளோம் . விரைவில் அவர்களை பிடித்து விடுவோம்."என்றனர்.
- ஆர். விவேக் ஆனந்தன்