மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி சுமார் 40 பயணிகளுடன் தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே வந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் பேருந்தை திருப்பியுள்ளார்.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் இடிபாடுகளில் சிக்கி நடத்துநர் சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த குன்றக்குடி போலீசார் காயமடைந்த பயணிகளை மீட்டு, காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.