நீலகிரி:'இந்த அதிகாரி வேலையே பார்க்கமாட்டாரு சார்': அமைச்சரிடம் போட்டுடைத்த கலெக்டர்

ஊட்டி தோட்டக்கலை
ஊட்டி தோட்டக்கலை

தமிழகத்தின் சர்வதேச பெருமையான நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அமைச்சர் முன்னிலையில் கலெக்டர் செய்த அதிரடியானது மிகப்பெரிய அதிவலைகளை உருவாக்கியுள்ளது.

மேட்டர் என்ன..? நீலகிரி மாவட்டத்தில் அரசு தோட்டக்கலை பண்ணை ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 27 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த துறையின் கட்டுப்பாட்டில்தான் உலகப் புகழ்பெற்ற ஊட்டி பொட்டானிகல் கார்டன், மரவியல் பூங்கா ஆகியன வருகின்றன. மே மாதம் சீசன் உச்சம் தொடும் நிலையில் இவர்கள் ஏப்ரலில் போராட்டம் நடத்தியதால்‘இந்தாண்டு மலர்கண்காட்சி நடக்குமா? நடக்காதா?’எனும் விவாதமே உருவானது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சுற்றுலாத்துறை அமைச்சர் என பலரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சமீபத்தில் தங்களுடைய போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இது குறித்து தோட்டக்கலை இயக்குனரிடம் ஆட்சியர் உள்ளிட்டோர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பணியாளர்களுக்கு 475 ரூபாய் இருந்த தினக்கூலியானது உயர்த்தி 500 ரூபாயாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து தோட்டக்கலை பண்ணை ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பினர். ஆனால், அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளப் பாக்கி இதுவரை தோட்டக்கலை அதிகாரிகள் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 10ம் தேதியன்று சுற்றுலாத்துறை அமைச்சரும், நீலகிரி மாவட்டம், குன்னூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் தாவரவியல் பூங்கா வந்தபோது தோட்டக்கலை பண்ணை ஊழியர்கள் அவர்களை முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து பிரச்சனையை கேட்டறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான ஆணை வெளிவந்தும் ஏன் சம்பளம் வழங்கவில்லை என தாவரவியல் பூங்கா துணை இயக்குனர் பாலசங்கர் மற்றும் அரசு தோட்டக்கலை துணை இயக்குநர் கருப்பசாமி ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் அம்ரித், தோட்டக்கலை துணை இயக்குனர் கருப்பசாமி அடுத்த மாதம் பணி ஓய்வு பெறும் நிலையில் சரிவர பணி செய்யவில்லை என அமைச்சரிடம் புகார் தெரிவிக்கத் துவங்க, பரபரப்பு பற்றிக் கொண்டது. அதவாது அமைச்சர் ‘ஏன் இவங்க இன்னமும் போராட்டம் நடத்துறாங்க?’என்று கேட்டதும், விஷயத்தை விளக்கிய ஆட்சியர், பின் துணை இயக்குநர் கருப்பசாமியை சுட்டிக்காட்டி “சார் இவரு (கருப்பசாமி) பண்ணமாட்டார்னு சொல்லி இயக்குநரே கடிதம் கொடுத்தார். ஆனாலும் இன்னும் வேலை நடக்கல. இவரு ரிட்டயர்டு ஆக போறார். அதனால எதையும் பண்றதில்லை.’என்று சொல்ல, அமைச்சர் ‘என்னங்க இதெல்லாம்?’என்று வருத்தமாக கருப்பசாமியிடம் கேட்க, அதற்கு அவரோட சில ஆவணங்களைக் காட்டி விளக்கம் கொடுத்தார்.

உடனே கலெக்டர் அமைச்சரிடம் ‘சார் நாம பேசிட்டிருக்கிற விஷயம் வேற, இவரு விளக்கம் கொடுக்குற விஷயம் வேற. சம்பந்தமே இல்லை’என்று அதிருப்தியைக் கூற, அதிர்ந்து போன அமைச்சர், கருப்பசாமியிடம் ‘சரி நானே பேசிக்கிறேன் பணியாளர்களிடம் பேசி, பத்து நிமிஷத்துல அமைதியாக்கிடுறேன்’என்றபடி நகர்ந்தார். இந்த விஷயம் முழுக்க மொபைலில் வீடியோ எடுக்கப்பட்டு, பரவி வைரலானது.

ஒரு துறையின் இயக்குநரே கடிதம் மூலமாக ஒப்புதல் தந்த பிறகும், துணை இயக்குநர் அதை நிறைவேற்றாமல் வைத்திருந்ததையும், அந்த அதிகாரியின் செயல்பாடுகள் அப்படித்தான் என்பதையும் அமைச்சரிடம் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் வெளிப்படுத்திய கலெக்டரின் செயலை மக்கள் பாராட்டுகின்றனர்.

நாம் கருப்பசாமியிடம் பேசியபோது “நான் பணியில் அலட்சியமானவனோ அல்லது கடமையை செய்யாதவனோ இல்லை. ஓய்வு பெற இருப்பதால் பல வேலைகளை முடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் சில விஷயங்கள் தாமதமாகலாம். இதற்கு மேல் இதைப் பற்றி பேச விரும்பவில்லை” என்று முடித்தார்.

-ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com