திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு கள ஆய்வுக்காக இன்று தமிழக ஆளுநர் ரவி வருகை தந்துள்ளார். வத்தலக்குண்டு சாலை வழியாக அவர் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பதாகைகள் மற்றும் கருப்பு கொடி, கருப்பு பலூன் ஆகியவைகளை ஏந்தியவாறு கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர்.
இதையறிந்த போலீசார் காளியம்மன் கோவில் நான்கு முனை சந்திப்பில் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்தும், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும் தொடர் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் தமிழக ஆளுநர் வருகை தருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி, கருப்பு பலூனுடன் வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வத்தலக்குண்டில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- தேனி பொ.அறிவழகன்