நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகில் கோவை பை-பாஸில் அமைந்துள்ளது எக்ஸல் கல்வி குழுமங்கள். இந்த குழுமத்தின் பாலிடெக்னிக் கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த மதுரை வீரன் என்ற மாணவர் படித்து கொண்டிருந்தார்.
எக்ஸல் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கான வகுப்பு இன்று தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக சீனியர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பேனர் கட்டுதல், அலங்கார வளைவுகள் அமைத்தல் ஆகிய பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதே கல்லூரியில் டிப்ளோமா எலெக்ட்ரானிக் கம்யூனிகேசன் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மதுரை வீரன், (20) என்ற மாணவர் நேற்று மாலை 04:15 மணியளவில் மூன்றாம் மாடியில் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது.
அவர் பேனர் கட்டும் போது தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு, சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.அழைத்து வரப்பட்டார். இவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாகக் கூறினார். இவரது உடல் குமாரபாளையம் ஜி.ஹெச். சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. போலீஸாரிடம் விசாரித்தோம். ‘‘திருப்பூர் மாவட்டம், நல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவரது அம்மா ஜோதி, அண்ணன் தினேஷ், அக்கா கலைச்செல்வி என தெரியவருகிறது. இவரது அப்பா அரசப்பன் பல ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். கடைக்குட்டி பையனுக்கு இப்படி ஆயிட்டுது. கல்லூரி சார்பில பேனர் கட்ட சொன்னார்களா? என்று விசாரித்து வருகிறோம்’’ என்றார்கள்.
குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். கல்லூரியில் ஆபத்தான ஆடம்பர விசயங்கள் தவிர்க்கபடவேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.