கனரக வாகனங்கள்
கனரக வாகனங்கள்

காற்றில் பறக்கவிட்ட ஆட்சியர் உத்தரவு: கனரக லாரிகளால் மாணவர்களுக்கு பதற்றமான சூழல்

ஆட்சியரின் உத்தரவை மீறி பள்ளி மாணவ, மாணவர்கள் செல்லும் வழியில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் பெற்றோர்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவி வருகிறது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாசிலாமணி முதலியார் மேல்நிலை பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி, அரசினர் தொடக்க பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வாலாஜாபாத் சந்திப்பு பகுதியானது காஞ்சிபுரம்-செங்கல்பட்டு-ஒரகடம் உள்ளிட்ட மிக முக்கிய சாலைகளுக்கு சந்திப்பு சாலையாக இருந்து வருகிறது.

இதற்கிடையில் இந்த சாலையில் அதிக அளவில் கனரக லாரிகள் சென்று வருவதால் பள்ளி நேரங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் நிகழ்வது தொடர் கதையாக இருந்தது.

முக்கிய சாலைகளை கடக்கும் கனரக வாகனங்கள்
முக்கிய சாலைகளை கடக்கும் கனரக வாகனங்கள்

இதனால் பள்ளி நேரங்களில் கனரக லாரிகள் செல்ல பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பள்ளி நேரங்களில் வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியினுள் கனரக லாரிகள் செல்ல தடை விதித்தார் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர். அவர் உத்தரவிட்டதை அடுத்து போலீஸார் கடும் கெடுபிடிகளை விதித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் கூட இல்லாமல் இருந்து வருவதால் பள்ளி நேரங்களில் அதிகளவில் கனரக லாரிகள் செல்வது வாடிக்கையாகி வருகிறது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் கனரக வாகனங்கள்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் கனரக வாகனங்கள்

சந்திப்பு சாலையில் அதிவேகத்துடனும் பயணித்து வருகின்றன. இதனால் சந்திப்பு சாலையிலேயே இருக்ககூடிய பள்ளி மாணவ, மாணவிகள் சாலைகளை அச்சத்துடனே கடந்து சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் பயம் கூடுதலாகவே உள்ளது.

எனவே உடனடியாக பள்ளி நேரங்களில் வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகளின் வழியே கனரக வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதித்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது‌.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com