கோவை மாநகராட்சியின் மேயராக இருப்பவர் கல்பனா. அடிமட்ட தொண்டரான இவரை மேயர் பதவியில் அமர்த்தியதன் மூலம் ‘திமுக ஒரு ஜனநாயக பேரியக்கம். இதில் தொண்டனும் உச்ச பதவியை தொடலாம்’ என நிரூபித்து, எதிர்க்கட்சியினரின் பாராட்டுகளையும் கூட வாங்கிக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் மேயர் பதவியை எதிர்பார்த்து பல வருடங்களாக கோவை மாநகர திமுகவில் உழைத்த பெண் நிர்வாகிகள் சிலர் கடும் அப்செட்டானார்கள். விளைவு, கோவை மாநகராட்சியை ஆளும் திமுகவினுள் கடும் மோதல்கள், விரிசல்கள்.
சூழல் இப்படியிருக்கையில் சமீபத்தில் மேயர் கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை கூறினார் அவரது எதிர்வீட்டுப் பெண் சரண்யா. அதாவது தன்னை அங்கே இருந்து வீட்டை காலி பண்ண வைப்பதற்காக மேயரின் தம்பி தன் வீட்டு கிச்சன் ஜன்னலின் மீது சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும், மேயரின் அம்மாவோ தூர்நாற்றம் வீசும் குப்பைகளை கொட்டுவதாகவும், மேயர் தங்களை போகும்போதும் வரும்போதும் திட்டிச் செல்வதாகவும், காம்பவுண்டின் பொது வாசல் கேட்டினை லாக் செய்து வைத்திருப்பதாகவும் பல புகார்கள் கூறினார். மேயர் கல்பனா மீது கோவை மாநகர காவல்துறை கமிஷனரிடம் புகாரும் கொடுத்தார்.
மேயர் கல்பனாவோ ‘இந்தப் பெண் பொய் புகார் கூறுகிறார். அக்கம் பக்கம் நபர்களிடம் சண்டை போடுவதுதான் அவரது இயல்பே. மேலும் தான் மேயரானதை ஜீரணித்துக் கொள்ள முடியாத எங்கள் கட்சி புள்ளிகள் சிலரின் தூண்டுதலும் இதில் இருக்கிறது. நான் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்ததை சகிக்க முடியாத சிலர் என் மேலே ஆசிட் முட்டை வீசுவேன்னு மிரட்டல் விட்டாங்க. இவ்வளவு மிரட்டலுக்கு நடுவில்தான் மேயராக என் கடமையை பண்ணிட்டிருக்கேன்’ என்றார்.
இந்த மோதல் விவகாரம் இப்படி போய்க் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 12ம் தேதியன்று பிற்பகலில் சரண்யா வீட்டின் வாசலில் நின்ற கார் திடீரென தீப்பற்றியுள்ளது. பக்கத்து வீட்டினர் சொன்ன பிறகு வெளியே ஓடி வந்த சரண்யா அதை அணைத்துள்ளார். அதன் பின் போலீஸுக்கு தகவல் தர, அவர்கள் வந்து விசாரணை நடத்தியதோடு தடய அறிவியல் சோதனையும் செய்தனர். காரிலிருந்த வயர் ஏதாவது சார்ட் சர்க்யூட் ஆகி தீ பிடித்திருக்குமோ? என்று சோதித்தனர், ஆனால் அப்படி ஆகவில்லை எனும் முடிவுக்கு வந்தனராம்.
சரண்யாவிடம் பேசியபோது “காருக்கு தீ வைக்கிற அளவுக்கு சூழ்நிலை மோசமாகி, எங்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலையாகியிருக்குது. கார் டேங்க்ல இருபது லிட்டருக்கும் மேலே டீசல் இருக்குது. தீ பிடிச்சதுல அது வெடிச்சிருந்தால் என்னாகியிருக்கும்? என் வீட்டுல ரெண்டு குழந்தைங்க இருக்குது சார். எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை” என்கிறார்.
காருக்கு தீ வைத்தது யார்? அல்லது காரில் தீ ஏற்பட்டது எப்படி? என கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. மேலும் மேயர் – எதிர்வீட்டு பெண் மோதல் இப்படியே நீண்டு கொண்டு செல்வதும் நல்லதல்ல. இதை விசாரித்து உடனடி ஆக்ஷன் எடுக்க வேண்டிய கடமை திமுகவுக்கு இருக்கிறது!
-ஷக்தி