கோவை அருகே காட்டுக்குள் போட்டோ ஷூட் நடத்தியதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வனத்துறை அமைச்சர் பதவியில் யார் வந்து அமர்ந்தாலும் அவர்களை சர்ச்சை வந்து சூழ்ந்துகொள்கிறது. இதற்கு முன் வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் சில சர்ச்சைகளில் சிக்கி துறை மாற்றத்துக்கு ஆளானார்.
இப்போது அவர் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தாலுமே கூட அவரது மகளின் கணவர், காப்புக்காட்டில் கணிசமான பகுதியை அழித்து சாலை போட்டார் என்று சமீபத்தில் வழக்கில் சிக்கினார்.
இந்த நிலையில், இப்போது தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் மதிவேந்தனும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். அதாவது அமைச்சர் கடந்த மே 4ம் தேதியன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு வரும் வழியிலும், முடித்து கிளம்பும்போதும் வனத்தில் சில இடங்களில் தனது கான்வாயை நிறுத்தி இயற்கை போட்டோ ஷூட்டில் அவர் ஈடுபட்டதாகவும், அவர் ஸ்டைலாக கொடுத்த போஸ்கள் ட்ரோன் பயன்படுத்தி எடுக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட போட்டோக்களுடன் சர்ச்சை பரபரப்பாகின.
‘வனத்தில் விலங்குகளுக்கும், பழங்குடி மக்களுக்கும் தீர்க்கப்படாத தேவைகள் எவ்வளவோ இருக்கும் நிலையில் அமைச்சர் இப்படி ஆய்வுக்கு சென்ற இடத்தில் போட்டோ ஷூட் நடத்தியது வேதனையை தருகிறது’ என இயற்கை ஆர்வலர்கள் ஆதங்கப்பட்டனர்.
இதுகுறித்து அமைச்சரிடம் கேட்டபோது ”நான் கோவை மாவட்டத்தின் வனச்சரகங்களில் இன்ச் பை இன்ச் ஆய்வு நடத்தி, பழங்குடி மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கான பல விஷயங்களை துவக்கி வைத்தேன்.
விலங்குகளால் தாக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் தந்தேன். வன விலங்குகளின் நலனுக்காக பல விஷயங்களுக்கு அனுமதியளித்து, ஆலோசனையும் செய்து வந்தேன்.
அதையெல்லாம் ஹைலைட் செய்யாமல், நான் ஆய்வு செய்ததை ஆவணங்களுக்காக என் துறையினர் போட்டோ எடுத்து வைத்ததை சிலர் சர்ச்சையாக்கியுள்ளனர். எண்ணம் போல்தானே வாழ்க்கை நண்பா” என்றார்.
- ஷக்தி