கோவை மாவட்டம், கிணத்துடவு, பொள்ளாச்சி மற்றும் மதுக்கரை பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சுற்றுவட்டாரங்களிலும் குவாரிகள் உள்ளன.
இங்கிருந்து கல், மண், கிராவல் என்று அனுமதிக்கப்பட்ட அளவுகளில் கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு சில நிறுவனங்களுக்கு டெண்டர் அடிப்படையில் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் பல குவாரிகளின் உரிமையாளர்களோ அனுமதிக்கப்பட்ட அளவை விட பல நூறு மடங்கு அதிகமாக கனிமவளங்களை கேரளத்துக்கு கடத்துகிறார்கள். இதுபோக உரிமமே இல்லாமல், முழுமையாக திருட்டுத்தனமாகவும் கனிம வள கடத்தல் நடப்பதாக கூறப்படுகிறது.
‘கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் இந்த முறைகேடு நடைபெற்றதாகவும், ஆனால் இந்த ஆட்சியிலோ மிக மிக அதிகமாக இது நடப்பதாகவும் பொங்குகுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து கோவையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான ஈஸ்வரன் கூறும்போது “இந்த கனிம வள கொள்ளையில் விண்ணைத்தொடும் லாபம் ஒரு புறம் இருக்கட்டும். இந்த கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக கொட்டப்படும் மாமூலை மட்டும் கவனித்தாலே தலை சுற்றிவிடும்.
ஒரு யூனிட்டுக்கு நானூறு ரூபாய் வீதம் ஒரு லோடுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மாமூல் வசூலிக்கப்படுகிறது. தினமும் குறைந்தது ஐந்தாயிரம் லோடு கடத்தப்படுகிறது. இதன்படி பார்த்தால் ஒரு நாளுக்கு இரண்டரை கோடி ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு நாலாயிரத்து ஐநூற்று அறுபது கோடி ரூபாய் மாமூல் வசூலிக்க பிளான் போட்டு, கல்லாக் கட்ட துவங்கிவிட்டனர்.
பணத்துக்காக கனிம வளங்களை இப்படி அள்ளிக் கொடுத்து கொண்டே இருந்தால் என்னாகும் கோவையின் நிலை?” என்று பொங்குகிறார்.
கோவையின் வளமே அதன் இயற்கை கட்டமைப்புதான். அவற்றில் மிக முக்கியமான இந்த கனிமவளங்கள் இப்படி கொள்ளை போவது என்பது சசிக்க முடியாத அளவுக்கு வெடித்துள்ள நிலையில் மக்கள் போராட்டத்துக்கான ஒருங்கிணைப்புகளை சிலர் துவக்கியுள்ளனர்.
கோவையை சேர்ந்தவரும், மாஜி அ.தி.மு.க அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி “விதிமீறலாக கனிம வளங்களை கடத்துவதை தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் ‘உங்க ஆட்சியில அப்படியே கனிம வளங்களை கயிறு கட்டி வெச்சு காப்பத்துனீங்களோ?’ என்று தி.மு.க.வினர் கிண்டலடிக்கின்றனர்.
அவர்களின் கிண்டலில் உண்மை உள்ளதுதான். இருந்தாலும் எதிர்கால சந்ததிகளின் பாதுகாப்புக்காக இந்த கனிம வள கொள்ளையை உடனடியாக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டியது அவசர அவசியம். செய்வாரா முதல்வர்? என நெட்டிசன்கள் கேளவி எழுப்பியுள்ளனர்.
- ஷக்தி