ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மூதாட்டிக்கு மயக்க மருந்துக் கொடுத்து 100 சவரன் நகை மற்றும் ₹2.5 கோடி ரொக்க பணத்தை கொள்ளையடித்த திருட்டு வழக்கில் தலைமறைவான பெண்ணை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை புலியகுளம் சாலையில் உள்ள கிரீன் பீல்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 63 வயதான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளைய மகளுக்கு திருமணம் ஆகாத நிலையில், தொழில் நிமித்தமாக வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் ராஜேஸ்வரிக்கும் கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த வர்ஷினி என்ற பெண்ணிற்கும் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி இரவு நேரம் வர்ஷினி தனது ஆண் நண்பர்களான அருண்குமார், சுரேந்தர் உள்ளிட்ட மூன்று பேரையும் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். ராஜேஸ்வரியுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்த வர்ஷினி இரவு உணவையும் ஆயத்தம் செய்து கொடுத்திருக்கிறார். அதில் மயக்க மருந்து கலந்திருப்பதை அறியாத ராஜேஸ்வரி உணவை சாப்பிட்டதால் மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.
அந்த வேளையில் வர்ஷினி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மூதாட்டி வீட்டில் வைத்திருந்த 100 சவரன் நகை மற்றும் 2.5 கோடி ரொக்க பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேஸ்வரி ராமவரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, வர்ஷினியின் ஆண் நண்பர்களை நேற்று அவர்களின் கைப்பேசி எண்ணை வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
முதற்கட்டமாக அவர்களிடமிருந்து 31 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 35 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடித்த பணத்தை அவர்கள் பகிர்ந்துக் கொண்டதாக தெரிகிறது. வர்சினியின் நண்பரான அருண், நகைகள் மற்றும் பணத்தை சேலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்த நிலையில், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகைகளைக் கைப்பற்றினர்.
முக்கிய குற்றவாளியான வர்ஷினியை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் வர்ஷினி வெளிநாட்டிற்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக கோவை, திருச்சி, மதுரை மற்றும் கேரளா விமானநிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு நேரில் சென்று அவர் ஏற்கனவே தப்பி சென்றிருக்கிறாரா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.