கோவை: காவல் அதிகாரியின் மகள் திருமண அழைப்பிதழ் வைரல் - என்ன சிறப்பு?

காவல் அதிகாரியின் மகள் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வைரலாகும் திருமண அழைப்பிதழ்
வைரலாகும் திருமண அழைப்பிதழ்

தமிழ்நாடு காவல் துறையில் கோவை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன்.

இவர், கடந்த 10 ஆண்டுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்னையை கண்காணிக்கும் நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

வெற்றிச்செல்வன் தனது பணியை சிறப்பாக கையாண்டு பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு துரித நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதற்காக ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் வெற்றிச்செல்வனின் மகள் நிஷாந்தினிக்கு திருநெல்வேலியை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் வெற்றிச்செல்வன் தனது மகளின் திருமணத்தை இந்து, கிறிஸ்துவம் மற்றும் முஸ்லீம் மதங்களின் குருமார்கள் முன்னிலையில் நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சாமிகள், கௌமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமா அத் தலைவர் மெளவி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

மூன்று மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் தன் மகளின் திருமண பத்திரிக்கையில் அச்சிட்டுள்ளதோடு அதில் ‘உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு’ என திருக்குறளையும் அச்சிட்டு அசத்தியுள்ளார்.

தற்போது இந்த திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காவல் துறை அதிகாரி மதங்களை கடந்து தனது மகளின் திருமணத்தை நடத்த முனைப்பு காட்டி இருப்பது காவல்துறை வட்டாரத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் மண்டபத்தில் திருமணம் வருகிற 24 மற்றும் 25ம் தேதிகளில் நடக்க உள்ள நிலையில் காவல் துறை இயக்குநர்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com