மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய, கோவை பகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நண்பர்கள், உறவினர்கள் மற்றும் டாஸ்மாக் - மின்துறை அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கரூரில் சோதனை நடத்திய அதிகாரிகள் கார் கண்ணாடி தி.மு.க-வினரால் உடைக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய கோவை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் தி.மு.க பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லம் , அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை அவிநாசி சாலை, கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் நடைபெறும் சோதனையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், செந்தில் பாலாஜியின் உறவினர் அரவிந்தனுக்கு சொந்தமான ரேஸ்கோர்ஸில் உள்ள வீடு , செளரிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அரவிந்தனின் மனைவி காயத்திரிக்கு சொந்தமான தொண்டாமுத்தூர், கெம்பனூரிலுள்ள அபாஷா போதை மறுவாழ்வு இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோன்று, கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதால் கோவையில் பரபரப்பு நிலவிவருகிறது.